துகாராமும்
தமிழ்நாடும்
 
சரித்திரம்
 
Feedback
 
Home
 
   

Font Problem

௨. பிறப்பும், முன்னோர்களும்.

 "தன்ய தேஹுகாவ புண்யபூமி டாவ,

தேதே(ம்) நாந்தே தேவ பாண்டுரங்க".

 

    ஸ்ரீதுகாராம் மஹாராஜின் ஜன்மபூமியாகவும், கர்மபூமியாகவும் இருக்கும் தேஹுகாவ் உண்மையிலேயே ஒரு புண்ணிய பூமியாகும். தேஹு கிராமத்தில் பிரத்தியக்ஷமாக பாண்டுரங்க தெய்வம் வசிப்பதால், தன்யத்வமும், புண்யத்துவமும் அங்கே வந்துவிட்டன. இது விழிப்புடன் இருக்கும் ஸ்தலமாகும்.

 

    இந்திராயணி நதியின் ஸௌந்தர்யமான தீரத்தில், பாண்டுரங்க பகவானின் தேவாலயம் உள்ளது. இங்கே ப்ரபஞ்சத்தை ஸ்ருஷ்டித்தவன், இடுப்பில் கைகளை ஊன்றி நிற்கிறான், இடது புறம் மாதா ரகுமாயியும் இருக்கிறாள். எதிரில் அஸ்வத்த மரம் இருக்கிறது. பக்கத்தில் கைகளைக் கூப்பிக்கொண்டு கருடன் நிற்கிறான். நுழைவாயிலில் விக்னராஜரும், வெளிப் புறத்தில் பைரவரும், ஹனுமானும் உள்ளனர். தென்பக்கத்தில் ஹரேஸ்வரரின் தேவாலயமும், அருகே பல்லாள வனத்தில் ஸித்தேஸ்வரர் அதிஷ்டானமும் இருக்கின்றன. இந்த க்ஷேத்திரவாசிகள், வாயால் பகவானின் நாமத்தைச் சொல்லிக்கொண்டு இருக்கும் தன்யர்கள், தெய்வவான்கள். இது துகாராம் மஹாராஜின் காலத்தில் இருந்த தேஹுகாவின் வர்ணனையாகும்.

 

    ஸ்ரீ துகாராம் மஹாராஜ் காலத்திற்கு சுமார் ௩00 வருஷங்களுக்கு முன்னர், அவருடைய முன்னோர் விஸ்வம்பரபாபா, இந்த தேஹு கிராமத்தில் வசித்து வந்தார். இவர்களுடைய குடும்பத்திற்கு விடோபாவே குலதெய்வம். விஸ்வம்பரபாபாவின் வீட்டில் தந்தைக்குப்பின் தமையன் என்ற முறையில் (வழிவழியாக) எல்லோரும் ஆஷாடி, கார்த்திகி வாரி யாத்திரை போவது வழக்கம். பண்டரி வாரி யாத்திரையை வழிவழியாக, நியமமாக கைகொண்டு வரும் விஸ்வம்பரபாபாவின் அசஞ்சலமான பக்தியின் காரணமாக, அவரருகில் ஸேவை சாதிப்பதற்காக, புண்டலீகன் அருகில் ஸேவை சாதிப்பதற்காக வைகுண்டத்தை விட்டுவிட்டு வந்ததைப் போல, பகவான் பண்டரிபுரத்தை விட்டு தேஹுவிற்கு ஓடி வந்துவிட்டான்.

 

"புண்டலிகா(ம்)சே நிகட ஸேவே(ம்),

கைஸா தா(ம்)வே பராடீ". (௧)

"மூள புருஷ விஸ்வம்பர,

விட்டலாசா பக்த தோர, (௧)

த்யாசே பக்தினே பண்டரீ,

ஸாண்டூனீ ஆலே தேஹு ஹரீ". (௨)

 

    ஆஷாட சுக்ல பக்ஷ தசமியன்று, பகவான், விஸ்வம்பரபாபாவின் கனவில் தோன்றி, "நான் உனது கிராமத்திற்கு வந்துள்ளேன்", என்று கூறி, அங்குள்ள ஒரு மாந்தோப்பில் சென்று, நித்திரை கொண்டான். காலையில், விஸ்வம்பரபாபா கிராமவாசிகளுடன் மாந்தோப்பிற்குச் சென்றார். அங்கு அவருக்கு விட்டல், ரகுமாயியின் ஸ்வயம்பு மூர்த்திகள் கிடைத்தன. பாபா தனது வீட்டில் இருந்த பூஜாக்ருஹத்தில், மூர்த்திகளைப் பிரதிஷ்டை செய்தார். பஞ்சக்ரோசத்திற்குள் (௧0/௧௨ கி.மீ சுற்றளவுக்குள்) இருக்கும் ஜனங்கள் தரிசனத்திற்கு வர ஆரம்பித்தார்கள். பகவானுக்கு பிரதி வருஷமும் மஹோத்ஸவங்கள் நடக்க ஆரம்பித்தன. மஹோத்ஸவ சிலவுகளுக்காக ஒரு நிலம் அவருக்கு இனாமாக கொடுக்கப்பட்டது. சுக்ல பக்ஷ ஏகாதசிகளில் யாத்ரீகர்கள் வர ஆரம்பித்தார்கள்.

 

    விஸ்வம்பரபாபாவின் காலத்திற்குப்பின் அவருடைய புத்திரர்கள் ஹரியும், முகுந்தும் பகவானின் ஸேவையை விட்டுவிட்டு, போர் செய்யும் தொழிலில் ஈடுபட்டார்கள். குடும்பத்துடன் ராஜாவின் ஆதரவில் வாழச் சென்றுவிட்டனர். அங்கே அவர்கள் ஸைன்யத்தின் அதிகாரிகளாகப் பணியேற்றனர். அவர்களுடைய இந்தச் செய்கை, அவர்களது தாயார் ஆமாபாயிக்கு சரியாகப் படவில்லை; தெய்வத்திற்கும் அது பிடிக்கவில்லை. ஒரு நாள் பகவான், ஆமாபாயின் கனவில் தோன்றி, "நான் உங்களுக்காக பண்டரிபுரத்தை விட்டுவிட்டு, தேஹுவிற்கு வந்தேன். ஆனால், நீங்கள் என்னை விட்டுவிட்டு, இங்கே ராஜவிடம் ஸேவை செய்ய வந்தது சரியல்ல. நீங்கள் தேஹுவிற்கே போய்விடுங்கள்", என்று கூறினான். ஆமாபாயீ கனவில் கண்ட விஷயங்களைப் பிள்ளைகளிடம் சொல்லி, தேஹுவிற்கே திரும்பிப் போய் விடுவது நல்லதென்று கூறினாள். ஆனால், பிள்ளைகள் அதை லக்ஷ்யம் செய்யவில்லை. அதற்குப்பின் , உடனே, ராஜ்யத்தின் மீது எதிரிகளின் படையெடுப்பு நடந்தது. இரு ஸஹோதரர்களும் போர்க்களத்தில் எதிரிகளிடம் சண்டையிட்டு மாண்டார்கள். முகுந்தனின் பத்னி உடன்கட்டை ஏறினாள். ஹரியின் பத்னி கர்ப்பவதியாக இருந்தாள். ஆமாபாயி அவளைக் கூட்டிக்கொண்டு தேஹுவிற்கு வந்தாள். மருமகளைப் பிரஸவத்திற்காகப் பிறந்த வீட்டிற்கு அனுப்பிவிட்டு, விட்டலனின் ஸேவையில் ஈடுபட்டாள். ஹரியின் பத்னிக்கு ஒரு ஆண் குழந்தை பிறந்தது. அதற்கு விட்டல் என்று பெயரிட்டார்கள். விட்டலனின் புத்திரன் பதாஜி, பதாஜிக்கு சங்கரன், சங்கரனுக்கு கான்ஹோபா, கான்ஹோபாவிற்கு போல்ஹோபா. போல்ஹோபாவிற்கு மூன்று புதல்வர்கள். மூத்தவன் ஸாவ்ஜீ, மத்தியில் துகாராம், கடைசியில் கான்ஹோபாராய்.

 

    ஸ்ரீ துகாராம் மஹாராஜ் அவதரித்த குலம் பவித்ரமானது.

 

"பவித்ர தே குள பாவன தோ தேச,

ஜேதே ஹரீசா தாஸ ஜன்ம கேதி". (௧)

 

    முன்னோர்கள் யுத்தகளத்தில் விரோதிகளிடம் போர் புரிந்து உயிர் நீத்த அந்தக்குலம் க்ஷத்ரிய குலமாகும். அந்தப் பரம்பரை நல்ல நாகரீகம் உள்ளது, தார்மீகமானது. வம்ச வழிவழியாக ஸ்ரீ விட்டலனின் உபாசனை நிகழ்ந்து வரும், மற்றும் வாரி யாத்திரை செய்யும் குடும்பமாகும். விவசாயம், கொடுக்கல்-வாங்கல், வியாபாரம் செய்து வருவதுமான குடும்பம். குடியிருப்பதற்கு ஒன்றும், வியாபாரத்தைக் கவனிக்க சந்தைப் பேட்டையில் ஒன்றுமாக, இரண்டு வீடுகள் இருந்தன. கிராமத்தில் நல்ல மதிப்பும், மரியாதையும் இருந்தது. சுற்றுப்புறங்களில் செல்வாக்கு இருந்தது. விவசாயம் செய்பவர்களை ’குணபி’ (விவசாயி) என்பார்கள். வியாபாரம் செய்பவர்களை ’வாணி’ (வியாபாரி) என்பார்கள். ஆனால், இதையெல்லாம் விட்டுவிட்டு, ஸ்ரீ துகாராம் மஹாராஜை ’கோஸாவி’ எனக் கூப்பிட்டார்கள்.

 

    கோஸாவீ என்பது ஒருபொழுதும் இந்தக் குலத்தின் குடும்பப் பெயராக இருந்ததில்லை. குடும்பப் பெயர் ’மோரே’ என்பதாகும். [இந்த்ரியாசே தனீ ஆ(ம்)ஹீ ஜாலோ கோஸாவீ] என்றபடி அது ஒரு (புலன்களை அடக்கிய) நிலை. பகவத்கீதையின் காலத்தில், வைசியர்களையும் சூத்திர ஜாதியில் சேர்த்துவிட்டனர்.

 

"ஸ்த்ரியோ வைஸ்யாஸ்ததா சூத்ராஸ்தேபி யாந்தி - பராம் கதீம்"

- கீதை, ௯-௩௨.

 

    ஞானதேவ் மஹாராஜின் காலத்தில் க்ஷத்திரியர்களும் சூத்திரர்களாகக் கருதப் பட்டனர்.

 

தைஸே க்ஷத்ரீ வைஸ்ய ஸ்த்ரியா,

கா(ம்) சூத்ர அந்த்யஜாதி இயா - ஞானதேவீ, ௯-௪௬0.

பிராமணன், சூத்திரன் என்ற இரண்டு ஜாதிகளே மிஞ்சின. ஆகவே, துகாராம் மஹாராஜும் சூத்திரர் என்று அழைக்கப் பட்டார்.

௩. அரசியல், தார்மீக மற்றும் சமூக ஸ்திதி.